புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர், ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.2 லட்சம் பணத்தை இழந்துள்ளனர்.
புதுச்சேரி, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி. இவர் ஆன்லைனில் லோன் தொடர்பாக தேடியுள்ளார். அப்போது, தண்டபாணியை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் வரை ஆன்லைன் லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதைநம்பிய தண்டபாணி, லோன் பெறுவதற்கான அனைத்து ஆவணங்களை, மர்ம நபருக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, லோன் வழங்குவதற்கு முன் அதற்கான வரி, செயலாக்க கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதை நம்பிய, தண்டபாணி பல தவணைகளாக ரூ.44 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பின் லோனும் வரவில்லை, மர்மநபரை தொடர்பு கொள்ள முடியாததால், ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளது தெரியவந்தது.
இதேபோல், மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த டீனா என்பவர் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மர்மநபர் கூறியதை நம்பி ரூ. 93 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளார்.
காரைக்கால் நிரவியை சேர்ந்த முருகவேல், தீபாவளியை முன்னிட்டு ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்த, ரூ.15 ஆயிரத்து 500 இழந்துள்ளார். குயவர்பாளையம் சுப்ரமணியர் கோவில் வீதியை சேர்ந்த மாதவன் ரூ. 30 ஆயிரமும், அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த முத்துவேல் ரூ.11 ஆயிரத்து 300, காந்தி நகரை சேர்ந்த உதயக்குமார் ரூ.5000, சண்முகாபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ரூ.31 ஆயிரத்து 350 என மொத்தம் 7 பேர் ரூ.2 லட்சத்து 1935யை இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.