காளிப்பட்டியில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹார விழா; ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் குவிந்தனர்
வீரபாண்டி: பக்தர்களின், 'அரோகரா' கோஷம் அதிர, சக்திவேலால் கந்தசாமி, சூரனை அழித்த சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று முன்தினம் காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. அதையொட்டி காலை, 6:00 மணி முதல் மாலை வரை, கந்தசஷ்டி கவசம், 36 முறை பாராயணம் பக்தர்களால் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு கையில் சக்திவேல் ஏந்தியபடி கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருளினார்.
அவருக்கு எதிரே, அசுரர்கள் போர் செய்யும்படி காத்திருந்தனர். விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 'வெற்றிவேல், வீரவேல், அரோகரா' என கோஷம் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றி வந்து ஒவ்வொரு திசையிலும் யானை முகா சூரன், சிங்க முகா சூரன், ஆடு முகா சூரன் இறுதியாக சூரபத்மனை, சக்திவேலால் அழித்தார். இன்று மாலை தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும்.