'விழித்திடு; எழுந்திடு; உறுதியாக இரு' மாநாடு: அண்ணாமலை பங்கேற்பு

கோவை : தேசத்தின் எதிர்காலத்தை செதுக்கும் வகையில் 'விழித்திடு.. எழுந்திடு.. உறுதியாக இரு' என்ற தலைப்பில் 'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில் கோவையில் இரு நாள் மாநாடு நடக்கிறது.


நாட்டின் வளர்ச்சியே தாரக மந்திரம் என்ற முனைப்புடன் பிரதமர் மோடி அரசு தொலைநோக்குடன் கூடிய திட்டங்களை வகுத்துவருகிறது. இதுகுறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்தி, செயல்வடிவத்தை கொண்டு சேர்க்கும் விதமாக, 'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில் 'விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு' என்ற தலைப்பிலான 'ஏ3' மாநாடு கோவையில் நடக்கிறது.

அவிநாசி ரோடு, 'கொடிசியா-இ' ஹாலில் வரும், 30 மற்றும் டிச., 1ம் தேதி என இரு நாட்கள் இம்மாநாடு நடக்கிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், 27க்கும் மேற்பட்ட பல்துறை வல்லுனர்கள் கருத்துக்களை பரிமாற உள்ளனர்.

இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா, மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி., அலெக்சாண்டர் ஜேக்கப், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் உட்பட பங்கேற்க உள்ளனர்.

'வாய்ஸ் ஆப் கோவை' நிறுவனர் தலைவர் சுதர்சன் சேஷாத்ரி கூறியதாவது:

'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு முன்பு 'பப்ளிக் பார் அண்ணாமலை' என்ற பெயரில் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. கோவைக்கு நல்ல எம்.பி., கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சாமானிய மக்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

தேர்தல் முடிந்தவுடன் இது மக்களின் குரலாக மாற வேண்டும் என்பதற்காக 'வாய்ஸ் ஆப் கோவை' என பெயர் மாற்றம் செய்து, தன்னார்வலர்கள் இணைந்து பணிபுரிந்துவருகின்றனர். இந்த அமைப்பின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30 மற்றும் டிச., 1ம் தேதிகளில் மாநாடு நடக்கிறது.

இதில், பா.ஜ., அண்ணாமலை இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் அண்ணாமலை, மக்களை சந்திக்கும் முதல் நிகழ்ச்சி இது. இதில், வரலாற்றாசிரியர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

முதல் நாள் தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகள் இடம்பெறும்.

இரண்டாம் நாளில் நம் மாநிலம் முதல் சர்வதேசம் வரையிலான அரசியல் குறித்து பேசப்படுகிறது. வல்லுனர்கள் மக்களின் கேள்விக்கும் பதில் அளிக்கவுள்ளனர்.

உலகில் நம் நாடு முதன்மையானதாக உருவெடுக்க பிரதமர் மோடி முனைப்பு காட்டி வருகிறார். மக்களிடம் இதுகுறித்த புரிதலை ஏற்படுத்துவதுடன், அதை செயலில் காட்டுவதும், மற்றவர்களிடம் போதிக்த வழிநடத்தும் விதமாக இம்மாநாடு அமையும். கல்லுாரி மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையிலும் வல்லுனர்களின் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, அவர் கூறினார்.

முன்பதிவு அவசியம்!



காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அனுமதி இலவசம். அதேசயம், முன்பதிவும் அவசியம் என்பதால், www.voiceofcovai.com என்ற இணையதள முகவரியிலும், 80568 46843, 95390 09032, 89392 22250, 80726 61870, 95003 29065 ஆகிய மொபைல்போன் எண்களிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.

Advertisement