மணிமுக்தா அணை நிரம்பாததால் கவலை: பருவமழையை நம்பும் விவசாயிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகள் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணை நிரம்பிய பின், பாசன கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இப்பகுதியில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. அதேபோல் நெல், மக்காசோளம், மஞ்சள், மரவள்ளியும் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும்.
இதனை நம்பி 57 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மாவட்டத்தில், கடந்த மாதம் அவ்வப்போது பெய்த பலத்த மழையில் அணை நிரம்பி, ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடி(736 மில்லியன் கன அடி) ஆகும். இந்த அணைக்கு மணி, முக்தா ஆகிய நதிகளின் மூலம் நீர் வரத்து ஏற்படுகிறது.
இதுதவிர மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.
அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், புதிய மற்றும் பழைய பாசன கால்வாய் வழியாக திறப்பதன் மூலம் 17 கிராமங்களுக்குட்பட்ட 5,496 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
கடந்த மாதம் பெய்த மழையில் மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து இன்றி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை நீர் மட்டுமே வந்து தேங்கியது.
இந்நிலையில், அணையின் பழைய ெஷட்டரில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு சில நாட்கள் ெஷட்டர் திறந்தே இருந்தது. வரத்து நீர் முழுவதும் ஆறு வழியாக வெளியேறியது. இதனால் அணையில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையால், தற்போது 22 அடிக்கு மட்டுமே நீர் மட்டும் உள்ளது.
அணை 30 அடிக்கு மேல் நிரம்பினால் மட்டுமே பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பதற்கான சூழ்நிலை உள்ளது.
தற்போதைய நிலையில் பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
இவை விவசாயிகளை பெரும் கவலை அடையச் செய்துள்ளது. மணிமுக்தா அணையை நம்பியுள்ள விவசாயிகள் வடக்கு கிழக்கு பருவ மழை நீடிக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.