ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது அரசியல் நிலைப்பாடு: விடாமல் கம்பு சுத்துகிறார் திருமா!

19

சென்னை: 'ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது அறிக்கை:
சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம். அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். குறிப்பாக, தி.மு.க.,வைப் பிடிக்காதவர்கள், தி.மு.க., கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம்.

மகத்தான வெற்றி



இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர். அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கிவருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம். 2019, 2021, 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது.

அதிகாரத்தில் பங்கு



இதனை கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்? 2026ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான். "ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு" என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனர்.

எதிர்பார்ப்பு



தற்போது, த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் உடன், நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார். விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும்.

கூட்டணி



தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை. "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்! நமது இலக்கில் நாம் குறியாக இருப்போம்! நமது களத்தில் என்றும் உறுதியாக நிற்போம்! இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisement