பள்ளிக்கரணையில் 150 சட்டவிரோத கட்டடங்கள்; 2 வாரங்களில் அகற்ற கெடு விதிப்பு

2

சென்னை: பள்ளிக்கரணையில் 150 சட்டவிரோத கட்டடங்களுக்கு வனத்துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 2 வாரத்துக்குள் குடியிருப்போர் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.


சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக, ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அவற்றை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, அதிகாரிகள் 150 சட்டவிரோத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 2 வாரங்களுக்குள் குடியிருப்போர் தானாகவே வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டடங்கள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


இது குறித்து, சென்னை வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், குவைட்-இ-மில்லத் நகர், காமாட்சி நகர் மற்றும் கே.பி.காந்தன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 13 ஹெக்டேர் (32 ஏக்கர்) சதுப்பு நிலம் அபகரிக்கப்பட்டு, 1,085 சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அகற்றப்படும். முதற்கட்டமாக, மகாலட்சுமி நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 50 குடிமக்களுக்கும், பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் நகரில் 100 குடிமக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நவ., 22ல் வெளியேற்றப்படும்.



ஐந்து ஆண்டுக்கு முன் மகாலட்சுமி நகர் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள குடிசைவாசிகளிடம் அதிகாரிகள் விவரங்களை சேகரித்தனர். சட்டசபை தேர்தல் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. சதுப்பு நிலத்திற்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement