வளர்ச்சி பணி: கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சின்னசேலம் அடுத்த எலியத்துார் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா 2.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பயனாளிகளிடம் நிலுவைப் பணிகளின் விபரங்கள், திட்ட மதிப்பீடு, வழங்கப்பட்ட திட்டத் தொகை, நிலுவைத் தொகைகள் விவரம், பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவைகளை கேட்டறிந்தார்.
மேலும் இத்திட்டத்தின்கீழ் 173 வீடுகள் தலா 2.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகைகள், பயனாளிகளின் எண்ணிக்கை, வீடு ஒதுக்கீடு, மொத்த திட்ட மதிப்பீடு, திட்ட மதிப்பீட்டு தொகை, நிலுவைத் தொகை போன்ற பல்வேறு திட்டப் பணிகளின் விபரங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற கட்டட பகுதியையும், சின்னசேலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்திற்கான இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சின்னசேலம் பி.டி.ஓ., ரங்கராஜன் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.