நிலம் வழக்கில் இழப்பீடு இல்லை; கலெக்டர் அலுவலகம் 'ஜப்தி'

கோவை ; நில ஆர்ஜித வழக்கில், இழப்பீடு வழங்காததால், கோவை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், திருமலையாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்மாலை குமார்,67; விவசாயியான இவருக்கு, அதே கிராமத்தில், நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக, கடந்த 1989 ல், அரசால் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. நிலத்திற்கு மிக குறைவான இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க கோரி, கடந்த 1992ல், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் பொன்மாலை குமார் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிமன்றம், ஏக்கருக்கு 80,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வட்டியுடன் சேர்த்து, 17.45 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால், முழுத்தொகையும் அவருக்கு தரப்படாமல், 3.23 லட்சம் ரூபாய் பாக்கி வைத்தனர். இத்தொகையினை வட்டியுடன் சேர்த்து வழங்க தவறியதால், அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதனால் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக அனைத்து பொருட்களை ஜப்தி செய்ய, கோர்ட் அமீனாவுடன், பாதிக்கப்பட்ட விவசாயி சென்றார். அப்போது, பணத்தை செலுத்த, 45 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு துறை தாசில்தார் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு மனுதாரர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை கை விடப்பட்டது.

Advertisement