3 மாதத்துக்கு ஒரு முறை நோயாளர் நலச்சங்க கூட்டம் நடத்த அறிவுரை
ராசிபுரம்: ராசிபுரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நோயாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: பொதுமக்கள் நலன் கருதி முதல்வரின் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும்-48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ராசிபுரத்தில், 53.39 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் திருச்செங்கோட்டில், 23 கோடி மதிப்பில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்ட நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.
ராசிபுரம், அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், நோயாளிகள் நலச்சங்கம் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் உள்ள, 142 படுக்கை வசதி, ரத்த வங்கி, மூன்று டயாலிசிஸ் இயந்திரங்கள், ஜென்செட் முறையாக பயன்படுத்திட வேண்டும். காவல்துறையினர் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கும் உறவினர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். மருத்துவமனையின் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
ராசிபுரம் சேர்மன் கவிதா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜானகி, தொழுநோய் பிரிவு ஜெயந்தினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.