கரூரில் விட்டு விட்டு சாரல் மழை

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், 12 மாவட்டங்களில் கனமழை, 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று மாலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலை, 6:00 மணி முதல் கரூர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.

Advertisement