சூரனை வதம் செய்தார் முருகன்; வெண்ணைமலை கோவிலில் சூரசம்ஹாரம்
கரூர்: அநீதியை அழித்து, நீதியை நிலை நாட்டும் விதமாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் நடந்தது. ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலில் சஷ்டி விழா கடந்த, 2ல் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. மாலை, 4:30 மணி முதல் கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரடியாக தோன்றினான். அவனை வதம் செய்தார்.
சூரனை அழித்து, தனது வாகனங்களான சேவலாகவும், மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். நேற்று மழை காரணமாக, கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்டத்தில் கரூர் கல்யாணபசுபதீஸ்வரர், வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலை முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.