விவசாயிகளிடமிருந்து ரூ.2 லட்சம் கோடிக்கு நேரடி கொள்முதல் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
தேனி : 'விளை பொருள்கள் ரூ.2 லட்சம் கோடிக்கு நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க பிரதமர் மோடி சாதனை செய்துள்ளார்,'என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசினார்.
சின்னமனுார், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வள மைய கட்டட திறப்பு விழா,பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோருக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசியதாவது:
சிறு விவசாயிகளுக்கு எந்தவித சான்றிதழும் இன்றி ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெறுகின்றனர்.
பால் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை இருந்தது.
தற்போது பால் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். 10 ஆண்டு ஆட்சியில் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றி உள்ளோம்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் விவசாயிகளிடமிருந்து வேளாண் விளை பொருள்களை ரூ.2 லட்சம் கோடிக்கு மத்திய அரசு நேரடி கொள்முதல் செய்து அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
ஏற்பாடுகளை சென்டெக்ட் இயக்குநர் பச்சைமால் செய்திருந்தார்.