முதல்வர் பார்வைக்கு -1
ஸ்ரீவில்லிபுத்தூர் : தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயிலுக்கு வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், 12 ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் ஆட்சி செய்யும் ஆன்மிக நகரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது ஆண்டாள் கோயிலுக்கு வரும் கடந்த சில ஆண்டுகளாக ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கேரளா, கர்நாடக, ஆந்திரா உட்பட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வரும் பக்தர்களுக்கு சுகாதார வளாகம், குளியலறை, ஓய்வறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
அதிலும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவிற்கு லட்சகணக்கான பக்தர்கள் வரும் நிலையில், நான்கு ரத வீதிகளில் போதுமான அளவிற்கு சுகாதார வளாக வசதிகள் இல்லை. குறைந்த கட்டணத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதி இல்லை.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அரசு துறை அலுவலர்கள் கூட தங்குமிடமின்றி தவிக்கின்றனர்.
கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள பழைய ஸ்டேட் பாங்க் கட்டடத்தை சீரமைத்து, நவீன் சுகாதார வசதிகள் செய்து, குறைந்த கட்டணத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
இதேபோல் என்.ஜி.ஓ. காலனி நுழைவு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு யாத்ரீகர்கள் விடுதி கட்டவேண்டும்.
திருப்பாற்கடல் மேல் பகுதியில் உள்ள காலியிடத்தை சீரமைத்து வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் இடமாக உருவாக்க வேண்டும்.
நகரிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், செண்பகதோப்பு பேச்சியம்மன் கோயில்களுக்கும் வெளிமாவட்ட பக்தர்கள் சென்று வரும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளூர், வெளியூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.