அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.75 லட்சம் மோசடி சென்னை நபர் கைது

கடலுார் : அரசு வேலை வாங்கித் தருவதாக பண்ருட்டி பெண்ணிடம் ரூ.3.75 லட்சம் மோசடி செய்த சென்னை ஆசாமியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி கலைச்செல்வி,32; இவர் ஆன்லைனில் சம்பாதிக்க, 'பிரண்ட் ஆப்' மூலம் பேசினால் நிமிடத்திற்கு 3 ரூபாய் கிடைக்கும் என, யூ டியூபில் பார்த்ததை நம்பி அதை பதிவிறக்கம் செய்து, பேசினார்.

எதிர்முனையில் பேசியவர் தன்னை சஞ்சய்விஜய்குமார் என அறிமுகப்படுத்திக் கொண்டவர், தனக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கம் உள்ளதாக கூறினார்.

அதனை நம்பிய கலைச்செல்வி, தான் எம்.எஸ்சி., படித்துள்ளதாகவும், அதற்கு தகுந்த வேலை வாங்கித் தருமாறு கூறினார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சஞ்சய் விஜய்குமார், ஆன்லைன் மூலம் கலைச்செல்வியிடம் பல தவணைகளில் ரூ.3.75 லட்சம் பணத்தை வாங்கினார். அதன்பிறகு சஞ்சய் விஜயகுமாரை தொடர்பு கொள்ளமுடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கலைச்செல்வி, கடந்த ஜூலை 3ம் தேதி கடலுார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அமலா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மவுலீஸ்வரன், ராஜமன்னன் உள்ளிட்ட தனிப்படையினர், வழக்கில் தொடர்புடைய சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார்,39, என்பவரை நேற்று கைது செய்து, கடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement