கந்த சஷ்டி விழா நிறைவு: முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்
சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில், உள்ள பாலசுப்பிரமணியர் சன்னதியில் நவ.,2ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது.
தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஆறாம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வெள்ளி அங்கியில் ஆறுமுகன் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர்.
விழாவின் 7 ம் நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானை, பாலசுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்து கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.2 ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மூலவருக்கு மாலையில் அபிஷேக, ஆராதனை, உற்ஸவர் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி அலங்கார தீபாராதனை நடந்தது. ஆறாம் நாளை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது. நிறைவு நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.
முன்னதாக காலை 9:00 மணிக்கு திருமுருகன் திருப்பேரவை அலுவலகத்திலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மூலவர் சன்னதியில் யாக குண்டம் முன்பாக உற்ஸவ முருகன் தெய்வானை எழுந்தருளினர்.
மணமக்கள் அலங்காரத்திற்கு பின்னர் சிவாச்சாரியார்களால் யாக பூஜை நடந்தது. பின்னர் மாலை மாற்றுதலுடன் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் காலை 10:20 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாட்டினை தேவஸ்தானம், திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.
திருப்புத்துார் காளியம்மன் கோயில் அருகில் முருகன் கோயிலிலும் கந்தசஷ்டி விழா நிறைவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயில், ஆனந்தவல்லி அம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், அலங்கார குளம் மயூரநாதர் முருகப்பெருமான், கால்பிரவு, இடைக்காட்டூர் மற்றும் இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
நேற்று மேற்கண்ட கோயில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தவுடன் முருகன்,வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார்.