எரிவாயு குழாய் பதிப்பால் பாதித்த ஏனாம் மீனவர்களுக்கு 2ம் கட்டமாக ரூ.54.74 கோடி முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி: எரிவாயு குழாய் பதிப்பினால் பாதிக்கப்பட்ட ஏனாம் மீனவர்களுக்கு இரண்டாம் கட்டமாக 54.74 கோடி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
ஏனாம் பிராந்தியத்திற்குட்பட்ட மீனவ கிராமங்களில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கடலில் இருந்து குழாய் பாதை அமைத்து பெட்ரோலிய மூலப்பொருட்களை கொண்டு செல்ல உள்ளது.
இதற்காக மீன்பிடி தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை ஈடு செய்ய நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட நிவாரணமாக 15 மாதத்திற்கு ரூ. 90.54 கோடி, ரூபாய் 5,279 மீனவர்களின் வங்கி கணக்கில் கடந்த மார்ச் மாதம் செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக ஒன்பது மாதத்திற்கு ரூ. 54.74 கோடி, பாதிக்கப்பட்ட 5,289 மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. மேலும், முதல் கட்ட நிவாரண தொகை வழங்கிபோது , விடுபட்ட 231 பேருக்கு நிவாரணம் வழங்க திருத்தம் செய்யப்பட்ட அரசாணையை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வெளியிட்டார்.
பின் முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு முதலில் ரூ.90.54 கோடி கொடுக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது தவணையாக ரூ. 54.74 கோடி வழங்கப்படவுள்ளது.
இது தவிர, விடுபட்டவர்களுக்கு ரூ. 6 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஏனாம் மக்களின் வாழ்விற்காக இந்த நிதியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் கொடுப்பது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இதற்காக டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இச்சந்திப்பின் போது புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் உடனிருந்தார்.