ரூ.4 கோடி நிதி ஒதுக்கியும் பாதியில் நிற்கும் செவல் கண்மாய் பராமரிப்பு பணி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் செவல் கண்மாயில் பராமரிப்பு செய்வதற்கும், ஆகாய தாமரைகளை அகற்றவும் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்த நிலையில், கிடப்பில் போடப்பட்டதால் செய்த பணிகளும் வீணானது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள செவல் கண்மாய் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் நகரின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. நாளடைவில் கண்மாய் பராமரிப்பின்றி போனதால் கழிவு நீரும் ஆகாயத்தாமரைகளும் வளர்ந்து கண்மாய் கெட்டுப் போனது. கண்மாயை துார் வாரி பராமரிக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
இதையடுத்து கண்மாயை தூர்வார 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கண்மாய் புரைமைப்பு பணிகள் 2023 மார்ச் ல் துவங்கப்பட்டது. கண்மாயில் ஆகாய தாமரைகளை அகற்றி, சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டியும், கரை பகுதியில் வாக்கிங் செல்ல பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. ஆகாய தாமரைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. கண்மாயை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டு ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது. மழைக்காலத்திற்குள் பணிகளை திட்டமிட்டு முடிக்காமல் மந்தகதியில் நடந்தது.
தற்போது, மழைக்காலம் துவங்கிய நிலையில் கண்மாயில் தண்ணீர் சேர்ந்து முற்றிலும் ஆகாய தாமரைகள் முளைத்து விட்டது. தடுப்பூச்சுவர் கட்டிய பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி விட்டது. கண்மாயில் தண்ணீர் நிறைந்து விட்டதால் பணிகளைச் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு விட்டனர். ஆகாயத்தாமரை நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து அடர்த்தியாக உள்ளது. இதனால் செய்த பணிகளும் வீணாகிவிட்டது. முறையான ஆய்வு, விரைவான பணிகள் எதுவும் திட்டமிட்டு நடக்காததால் ஒதுக்கப்பட்ட நான்கு கோடி வீணான நிலையில் கண்மாய் பழைய நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.