10 ஆண்டுக்கு பின் ரயில்வே அங்கீகார தேர்தல்: ஊழியர்கள் ஆதரவை பெற சங்கங்கள் போட்டி
சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், 10 ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதத்தில் நடக்க உள்ளதால், தொழிற்சங்கங்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக எஸ்.ஆர்.எம்.யு., உள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2013ம் ஆண்டுக்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை. அடுத்த மாதம் 4, 5, 6ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள, 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.
தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ்., எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் தங்களது பிரசாரத்தை துவக்கி உள்ளன.
ரயில்வே அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டி: எஸ்.ஆர்.எம்.யு., பொதுச்செயலர் கண்ணையா: ரயில்வேயில், 80 சதவீத ஊழியர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்தி வருகிறோம். நாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பின், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும், 10 சதவீதமும் மீண்டும் ஊழியர்களின் பி.எப்., கணக்கில் செலுத்தும் வகையில், தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எங்களது சாதனைகள், ரயில்வே பணியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
டி.ஆர்.இ.யு., மூத்த தலைவர் இளங்கோவன்: ரயில்வே ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம்.
ஜனநாயக பூர்வமான தொழிற்சங்கமாக, ஊழலற்ற தொழிற்சங்கமாக செயல்படுகிறோம். தற்போதுள்ள தொழிற்சங்கங்களின் தவறுகளையும், ரயில்வேயின் தவறான கொள்கைகளையும் சுட்டிக்காட்டி, ஊழியர்களின் ஆதரவை திரட்டி வருகிறோம்.
தட்சன் ரயில்வே கார்மிக் சங்க பொதுச்செயலர் ராஜேஷ் முருகன்: அகில இந்திய அளவில் பல்வேறு சங்கங்கள், எங்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கி உள்ளன. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். எட்டாவது ஊதிய சம்பள கமிஷன், போனஸ் உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற குரல் கொடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.