கரும்பச்சை நிறத்தில் கழிவுநீர்; கண்ணீர் வடிக்குது வைகை!
திருப்புவனம்: வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் உள்ளிட்ட பகுதி ஒட்டு மொத்த சாக்கடையும் வைகை ஆற்றில் கலப்பதால் வைகை தண்ணீர் மாசடைந்து வருகிறது.
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. பெரும்பாலான நகரங்களில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே வைகை ஆற்றில் விடுகின்றனர். இதனால் செம்மண் நிறத்தில் வரும் வைகை ஆறு மதுரை நகரை தொட்டவுடன் மாசடைந்து கரும்பச்சை நிறமாக மாறி விடுகிறது.
இதனை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது விளைச்சல் பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாயிகளும் தோல் மற்றும் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் அரசின் உள்ளாட்சி அமைப்புகளே வைகை ஆற்றை தொடர்ந்து மாசுபடுத்தி வருகின்றன. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் உள்ளிட்ட எந்த ஊரிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையமே கிடையாது.
உள்ளாட்சி அமைப்புகள் தெருக்களில் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தால் அதில் விடப்படும் கழிவு நீர் அப்படியே வைகை ஆற்றிற்கு செல்லுமாறு தான் வடிவமைக்கின்றனர். கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் வைகை ஆற்றில் இருந்து ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளை சுற்றிலும் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார கேடு நிலவி வருகிறது. வைகை ஆற்றை ஒட்டி உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீர் செல்ல இணைப்பு தொட்டிகளும் அமைத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.