டாக்டரை கத்தியால் குத்திய மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு; தொடர்ந்து நிகழும் சோகம்!

2

சென்னை: டாக்டரை கத்தியால் குத்திய கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் சிகிச்சை அளிக்க இல்லாத காரணத்தால், நோயாளி விக்னேஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். தாய்க்கு சிகிச்சை அளிக்காத கோபத்தில் டாக்டரை நோயாளியின் மகன் தாக்கினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துவமனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று (நவ.,14) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நிறுத்தப்பட்டது. அவசர பிரிவு மட்டுமே செயல்பட்டது. இது நோயாளிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த, விக்னேஷ் என்பவர், வயிற்று வலியால் நேற்று கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவர் இன்று (நவ.,15) அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தார். உறவினர்கள் மருத்துவமனை முன்பு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement