திராவிட இயக்கம் வலுவடைய காரணமே எம்.ஜி.ஆர். தான்; சைதை துரைசாமி
சிவகங்கை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தான் திராவிட இயக்கம் வலுவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தேவகோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர் தினவிழா, எம்.ஜி.ஆர். நூலக திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி எம்.ஜி.ஆர்., நூலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: அனைவரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியலை சினிமா மூலம் எம்.ஜி.ஆர். வழிகாட்டியுள்ளார். எம்.ஜி.ஆர்., சுடப்பட்ட போது, ' என் சகோதாரர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு வாக்களியுங்கள். முதல் வெற்றி மாலையை நான் அணிவிக்கிறேன்," என அண்ணாதுரை கூறினார். அதன்பின், மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆருக்கு மக்கள் கொடுத்தனர்.
ஜானகி அம்மாள், ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் முதல்வராகி இருக்கிறார்கள் என்றால், அதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம். வேறு யாராலும் இதை செய்திருக்க முடியாது. அவரால் தான் திராவிட இயக்கமே வலுவடைந்தது. அடுத்த தலைமுறையினருக்கும் எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்.
உயர்கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அதனால், தான் இன்று மிகப்பெரிய அளவில் உயர்கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு புகழை சேர்க்கவே இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.