குன்னேஸ்வரன் 'குட்-பை'
சென்னை: டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார் குன்னேஸ்வரன்.
இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 35. சென்னையை சேர்ந்த இவர், 2010 முதல் தொழில் ரீதியிலான டென்னிசில் பங்கேற்று வந்தார். 2 சாலஞ்சர் தொடர், 8 ஐ.டி.எப்., 1 ஐ.டி.எப்., இரட்டையர் கோப்பை வென்றார். 2018 ஆசிய விளையாட்டில் வெண்கலம் கைப்பற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஆஸ்திரேலிய ஓபனில் 2 முறை, பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யு.எஸ்.ஓபனில் தலா ஒரு முறை பங்கேற்றார். அனைத்திலும் முதல் சுற்றுடன் திரும்பினார்.
ஒற்றையர் தரவரிசையில் அதிகபட்சம் 2019, ஏப். 22ல் 75 வது இடத்தில் இருந்தார். இரட்டையரில் 2018ல் 248 வதாக இருந்தார். 2019, இந்தியன் வெல்ஸ் தொடரில் 'டாப்-20' தரவரிசையில் இருந்த ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலஷ்விலியை (18 வது) வென்றது, சிறந்த வெற்றியாக உள்ளது. இந்திய அணிக்காக டேவிஸ் கோப்பை தொடரில் பங்கேற்றார்.
தற்போது சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
கடந்த 30 ஆண்டுகளாக டென்னிஸ் எனது சரணாலயமாக, சிறந்த ஆசிரியராக, நம்பிக்கையுள்ள தோழனாக இருந்தது. டென்னிஸ் எனக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது. எல்லை தாண்டிய நட்பு, வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை தந்துள்ளது. வீரராக மட்டுமல்ல, ஒரு மனிதனாக சிறந்து விளங்க உதவி செய்தது.
தற்போது இதிலிருந்து விடைபெறுகிறேன். எனக்கு முதுகெலும்பாக இருந்த குடும்பம், பயிற்சியாளர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு குன்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.