குடிநீர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பாததால்...கவலை! தீவிரம் அடையாத வடகிழக்கு பருவமழை
சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஏரிகளில் தண்ணீர் நிரம்பாவிட்டால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாகவும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாகவும் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 13.2 டி.எம்.சி., சென்னைக்கு ஒரு மாதத்திற்கு, 1 டி.எம்.சி.,குடிநீர் தேவை.
தேவை அதிகரிப்பு
சென்னை குடிநீர் வாரியம் வினியோகிக்கும் குடிநீரை, பெரும்பாலான சென்னைவாசிகள் குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. துணி துவைப்பது, குளிப்பது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படும் சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீரையே, குடிக்க பயன்படுத்துகின்றனர்.
கேன் குடிநீரை சென்னைவாசிகள் பயன்படுத்தாத பட்சத்தில், ஒரு மாத குடிநீர் தேவை 2 டி.எம்.சி.,க்கு மேல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தற்போது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தமாக 6.06 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 9.57 டி.எம்.சி., நீர் இருந்தது. கடந்தாண்டு நீர் இருப்பைவிட தற்போதைய நீர் இருப்பு, 3.50 டி.எம்.சி.,க்கு மேல் குறைவாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை வாயிலாக, இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்க வேண்டும். ஆனால், ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால், குடிநீர் ஏரிகள் இன்னும் நிரம்பாமல் நீர்இருப்பு கவலைக்கிடமாக உள்ளது.
நம்பிக்கை
தற்போதுள்ள நீரை வைத்து, அடுத்தாண்டு கோடை கால குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், நீர் இருப்பு குறைவாக உள்ளதால், கோடை கால குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், நீர்வளத்துறையினர், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் 1 டி.எம்.சி., அளவிற்கு நீர் தேக்காமல் காலியாக வைக்கப்படும். அதன்பிறகுவரும் நீர், உபரியாக வெளியேற்றப்படும்.
நடப்பாண்டு பருவமழை அதிகமாக பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் பாதி முடிந்தும், இன்னும் பருவமழை தீவிரம் அடையவில்லை.
இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டு ஏரிகளில் உபரிநீர் திறப்பது சந்தேகம்தான். டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் இருப்பதால், அதற்குள் ஏரிகள் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக,கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த நீர் பூண்டி ஏரிக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையும் தீர்க்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு முறைப்படி வழங்குவது கிடையாது. கடந்தாண்டு, 2.41 டி.எம்.சி., மட்டுமே நீர் திறக்கப்பட்டது. நடப்பு 2024 - 25ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில் 1.23 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் எல்லையை கடந்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 219 கனஅடி நீர் கிடைத்தது. இதில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழைநீரும் அடக்கம்.
ஏரி மொத்த கொள்ளளவு நீர்இருப்பு (டி.எம்.சி.,)பூண்டி 3.23 0.46புழல் 3.30 2.40சோழவரம் 1.08 0.11செம்பரம்பாக்கம் 3.64 1.88தேர்வாய்கண்டிகை 0.50 0.30வீராணம் 1.46 0.89