தொடர் மின்தடையால் இருளில் மூழ்கிய மலை கிராமங்கள்
தாண்டிக்குடி : தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் தொடர் மின்தடையால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இம்மலைப் பகுதிக்கு கொடைக்கானல் துணை மின் நிலையம் மூலம் மின் சப்ளை அளிக்கப்படுகிறது. இரு தினங்களாக மலைப்பகுதியில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதையடுத்து மின்பாதைகளில் இடையூறு ஏற்பட்டு 50க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் விடிய, விடிய இருளில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் சப்ளையில் பிரச்னை ஏற்படும் நிலையில் மாற்று சப்ளையாக வத்தலக்குண்டு, செம்பட்டி சப்ளையாக இருப்பது வழக்கம். இதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். தாண்டிக்குடி, பண்ணைக்காடு மின் அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பபடாததால் இடையூறுகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாரல் மழைக்கே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது இருக்க சில ஆண்டுகளுக்கு முன் ஊத்து பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம்அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் பணிகள் ஏதும் நடக்காது கிடப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதியில் நீடிக்கும் மின் தடையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.