சித்த மருத்துவத்தில் பாத சிகிச்சை இயந்திரம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அறிமுகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சித்த மருத்துவ துறை சார்பில் அலுவலர்கள்,பொது மக்களுக்காக புதிதாக நவீன முறையிலான பாத சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகளுக்கான புற சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ துறை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள்,அங்கு பணியாற்றும் அலுவலர்கள் பயனடையும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர் அலுவலக நுழைவு பகுதி வலது புறத்தில் சித்த மருத்துவ பிரிவு துவங்கப்பட்டது.

அங்கு ஓரு டாக்டர், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெறும் நிலையில் டாக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் புற சிகிச்சை பிரிவு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதங்களுக்கு சிகிச்சை கொடுக்கும் வகையில் பாதசிகிச்சை இயந்திரம்,நீராவிக்குளியல்,நெருப்பு சிகிச்சையான சுட்டிகை,வர்ம சிகிச்சை,நடை பயிற்சி இயந்திரங்கள் உள்ளன.

இந்த பிரிவு திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள்,அங்கு வரும் பொது மக்கள் சிகிச்சைகளை ஆர்வமாக பெற்று செல்கின்றனர்.

இன்னும் கூடுதலாக அறை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதுவும் கிடைத்ததும் கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தப்படும் என சித்த மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement