'பாதுகாப்பான பிரசவ திட்டம்' ;மாவட்ட அளவில் விரிவாக்கம்
திருப்பூர்; தமிழக அரசு பாதுகாப்பான பிரசவ திட்டத்தை துவக்கியுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும், அவசர கால டாக்டர் தலைமையில் மருத்துவ கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மகப்பேறு உயிரிழப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், பிரசவத்துக்கு பிந்தைய அதிக ரத்தப்போக்கு, உயர்ரத்த அழுத்தம், ரத்தத்தில் கிருமி தொற்று மற்றும் திடீர் இதய பாதிப்பு, குழந்தை பிறப்புக்கு பின், தாயின் உயிரை காப்பாற்றுவதில் பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.
இதனை தவிர்க்கவும், தாய் மற்றும் சேயுக்கு உயிர்காக்கும் உயர்சிகிச்சையை, உடனடியாக தர, 'பாதுகாப்பான பிரசவ திட்டம்' என்ற புதிய திட்டத்தை பொதுசுகாதாரத்துறை துவக்கியுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், தமிழகம் முழுதும் உள்ள கர்பிணிகள் விவரம், ஒவ்வொரு சுகாதார மாவட்டம் வாரியாக சேகரிக்கப்பட்டு, 'பிக்மி' மற்றும் அரசு மருத்துவமனையில் செயல்படும் 'சீமாங்க்' மையங்களில் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் கர்ப்பிணிகள் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களின் இணைநோய் உள்ளவர், பிரசவகால உடல் நல பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டறியப்படுவர். அவர்களை பற்றிய முழுவிபரம் 'பிக்மி' (PICME) தளத்தில் பதிவேற்றப்படும். அத்துடன், இவ்விபரங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் அவசர கால மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (சீமாங்க்) மருத்துவ மையங்களுக்கும் பகிரப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், பாதுகாப்பான பிரசவ திட்டத்துக்கென தனி மருத்துவ கட்டமைப்பு ஒருங்கிணைக்கப் பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சீமாங்க் மையங்களில், 24 மணி நேரமும் அவசர கால மகப்பேறு டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர் குழு தயாராகி வருகிறது.
இக்குழு பிரசவ நாளுக்கு முன்பாக அனுமதியாகும் கர்பிணிகளுக்கு, பாதுகாப்பான பிரசவம் உறுதியாக தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.