'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

திருக்கோவிலுார் : முகையூரில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் துவக்க விழா நடந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் இரண்டாம் கட்ட 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், முகையூர் அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, 137 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் 1781 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்து 349 கர்ப்பிணி பெண்களுக்கும், 9,748 பாலுாட்டும் தாய்மார்களுக்கும், 76 ஆயிரத்து 924 இணை உணவு பெரும் குழந்தைகளுக்கும், 40 ஆயிரத்து 948 குழந்தைகள் முன் பருவ கல்வி மற்றும் மதிய உணவுடன் வாரம் 3 முட்டைகள் பெற்று பயனடைகின்றனர்.

தமிழக முதல்வர் கல்வி மற்றும் சுகாதாரத்தினை தனது இரு கண்களாக பாவிக்கிறார். கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.

முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ., க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், முகையூர் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய துணைச் சேர்மன் மணிவண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜிவ் காந்தி, முகையூர் ஊராட்சி தலைவர் லுாயிஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement