மழை காலங்களில் மின் விபத்தை தவிர்க்க மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி, : பருவ மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு:
வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் தரமான ஒயரிங் பொருட்களை உபயோகித்து, முறையான நில இணைப்பு கொடுக்க வேண்டும். மின் விபத்தை தவிர்க்க எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் அவசியம் பொருத்த வேண்டும். பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
மின் கம்பத்தின் ஸ்டே ஒயர் அல்லது கம்பத்தின் மீது கொடி, கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்சுகள் பொருத்த கூடாது. மழைக் காலங்களில் மின்மாற்றிகள், கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்ல கூடாது. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால், அருகே செல்வதை தவிர்த்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனே மின்சாரத்தின் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.
விவசாய நிலங்களில் பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு மின்வேலி அமைப்போர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பழுதடைந்த மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் குறித்து 94987 94987 என்ற எண் மூலம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.