கூரை சேதம், கழிவுநீர், குப்பையால் சுகாதாரக்கேடு; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண் கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுதல், வாறுகால் கழிவு நீர், குப்பை தேங்கி சுகாதாரக்கேடு, பயன்படுத்த முடியாத நிலையில் பாலுாட்டும் அறை என எண்ணற்ற பிரச்னைகளால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள கூரைகளில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பயணிகள் தலை மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது.

இங்குள்ள வாறுகால் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் மீது அமைக்கப்பட்ட இரும்பு கம்பி தடுப்புகள் சேதமாகியும், சிலவற்றில் தடுப்புகளே இல்லாமலும் உள்ளது.

குப்பை சரியாக அகற்றப்படுவதில்லை. சுகாதார வளாகத்தை சுத்தம் செய்யாமல் தண்ணீர் ஊற்றி ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தமான பகுதி போன்று கண்துடைப்பு பணிகளை செய்கின்றனர்.

தாய்மார் பாலுாட்டும் அறையை பயணிகள் நிழலுக்கு அமரும் இடமாக மாற்றியுள்ளனர். இந்த அறையின் கதவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கழிவறையின் கூரை மீது புற்கள் வளர்ந்துள்ளது.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் வெயிலுக்கு ஒதுங்குவதற்கு கூட நிழல் இன்றி மழை, வெயிலில் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலையே நீடிக்கிறது.

இங்கு வரும் பயணிகள் தாகத்திற்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

பயணிகள் அமரும் நாற்காலிகள் முறிந்துள்ளது. பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் உள்ள இரும்பு பலகை சேதமாகி சரிந்து விழும் நிலையில் உள்ளது.

வசதியை ஏற்படுத்த வேண்டும்



ஆறுமுக சக்திவேல், கடை உரிமையாளர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் கூரை, நாற்காலி சேதம், குடிநீர் வசதி இல்லாமை, சுகாதாரக்கேடு என பல பிரச்னைகள் உள்ளது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அல்லல்படும் நிலையே தொடர்கிறது. இந்த பிரச்னைகளை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒதுங்க முடியவில்லை



பிரபாகரன், கூலித்தொழிலாளி: விருதுநகரில் மக்கள் தொகை, வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதற்கு ஏற்ப பழைய பஸ் ஸ்டாண்டில் வசதிகள் ஏற்படுத்தவில்லை.

இதனால் பயணிகள் வெயில், மழையால் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் சுகாதார வளாகம், வாறுகால் முறையாக சுத்தம் செய்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.

Advertisement