சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
தேனி: தேனி அல்லிநகரம் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் பவுர்ணமி குழு சார்பில், அன்னாபிஷேக விழா நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் சுயம்பு வீரப்ப அய்யனார் சுவாமிக்கு பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், வில்வ இலை, மாப்பொடி, மஞ்சள், திருமஞ்சனப் பொடி, தேன், பசும் நெய், பழச்சாறு, வெல்லம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
நிறைவாக அன்னத்தால் அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சோமாஸ் கந்தர், வீரபாண்டி கண்ணீஸ்வர முடையாார் சுவாமி, சிவ கணேச கந்த பெருமாள் கோயில் மூலவர் சிவன்,பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிவன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.
கம்பம்: சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரம் கிலோ அரிசி சமைத்து சாதத்தை அங்குள்ள சிவலிங்கத்திற்கு சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சுருளி அருவியில் அன்னம் கரைக்கப்பட்டது. காலையில் துவங்கி மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் நேற்று காலை முதல் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரிசி சாதம், காய்கறிகள் படைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. முல்லைப் பெரியாற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
--போடி: பவுர்ணமியை முன்னிட்டு போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி சுப்பிரமணியர் கோயில், போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.