லடாக்கில் 4ஜி சேவை; இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்

1

ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 4ஜி சேவை வழங்கப்படுவது, இந்திய ராணுவத்திற்கு பெரிதும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.


மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தத்தின் போது, லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது.


லடாக்கில் பயங்கரவாதிகளின் செயல்பாட்டை முடக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன், லடாக்கில் உள்ள 20 குக்கிராமங்களில் 4ஜி சேவையை கொண்டு வருவதற்கான உயர்கோபுரங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், 4ஜி சேவை அமலுக்கு வந்துள்ளது. இது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், " மிகவும் உயரமான பகுதியாக இருக்கும் லடாக்கில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தி இருப்பது ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த பிராந்திய வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும்," என்றார்.

Advertisement