இந்தியாவிடம் வீழ்ந்தது சீனா: ஆசிய ஹாக்கியில் அசத்தல்

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-0 என, சீனாவை வீழ்த்தியது.
பீஹாரில், பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்கின்றன.


லீக் போட்டியில், உலகின் 'நம்பர்-9' இந்திய அணி, 3வது இடத்தில் உள்ள சீனாவை சந்தித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவுக்கு எதிராக இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினர். சங்கீதா குமாரி (32வது நிமிடம்), கேப்டன் சலிமா (37வது), தீபிகா (60வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். சீன வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் மூன்று போட்டியில் மலேசியா (4--0), தென் கொரியா (3--2), தாய்லாந்தை (13-0) வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா, அரையிறுதிக்கான இடத்தையும் உறுதி செய்தது.

Advertisement