சாலை நடுவே தடுப்பு இல்லாததால் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் நகரில், செங்கழுநீரோடை வீதி, மேற்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு, கிழக்கு ராஜவீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான வீதிகள் உள்ளன.

இடது புறமாக செல்லும் வாகனங்கள், வலதுபுறமாக கடந்து செல்லக்கூடாது. வலதுபுறமாக செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக செல்லக்கூடாது என, காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார், சாலை நடுவே இரும்பிலான தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த சாலை நடுவே போடப்பட்ட தடுப்புகள் சமீபத்தில் அகற்றப்பட்டன. அதன் பின், அந்த தடுப்பு போடப்படவில்லை.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தான்தோன்றி தனமாக, குறுக்கே செல்கின்றனர்.

குறிப்பாக, இரட்டை மண்டபத்தில் இருந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சாலை நடுவே தடுப்பு இல்லாததால் தான்தோன்றி தனமாக செல்கின்றன. இதனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, கச்சபேஸ்வரர் கோவில் நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, தான்தோன்றி தனமாக செல்லும் வாகனங்களை சாலை நடுவே தடுப்பு ஏற்படுத்தி தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement