காஞ்சி பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு திருவிழா

காஞ்சிபுரம், நவ.17-

காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று, செவிலிமேடு பாலாற்றாங்கரையில் முடவன் முழுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கார்த்திகை மாத முதல் தேதியான நேற்று, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றங்கரையில், திருச்செங்காட்டங்குடி சிவபெருமானைப் போன்ற வடிவில் சோமாஸ்கந்தரும், அவருக்கு நேர் எதிரே பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும், விநாயகர், முருகன், நரசிம்ம வர்ம பல்லவ மன்னன், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சோமாஸ்கந்தர் அலங்காரத்துக்கு கீழே மணல்லிங்கம் வடிவமைக்கப்பட்டு தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பாலாற்றங்கரையில் மணலால் லிங்கம் வடிவமைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் சக்தி.பு.கந்தன் பிள்ளைக்கறி அமுது படைத்த சிறுத்தொண்டநாயனார்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிறுதொண்ட நாயனாருக்கு, சோமாஸ்கந்தர் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement