அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக கொச்சிக்கு கூடுதல் விமானங்கள்
சென்னை, சென்னை - கொச்சி இடையே தினமும் ஐந்து புறப்பாடு மற்றும் ஏழு வருகை விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
நேற்று, கார்த்திகை மாதம் பிறந்ததால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, இங்கிருந்து பக்தர்கள் அதிகளவில் செல்வர்.
அவர்களின் வசதிக்காக, விமான நிறுவனங்கள், சென்னை - கொச்சி இடையேயான விமான சேவையை அதிகரித்துள்ளன.
மொத்தம் எட்டு புறப்பாடு விமானங்கள், எட்டு வருகை விமானங்கள் என 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலை அய்யப்ப பக்தர்கள், விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்ய துவங்கி உள்ளதால், இருமுடி பைகளில், தேங்காய் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, விமானங்களில் கூடுதல் பயணியர் செல்வர். இந்த கூடுதல் விமான சேவை, அய்யப்ப பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி விமானம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டது.
விமானம், திருப்பதி வான் வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானி, ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். அவர்கள், திருப்பதி விமான நிலையத்திற்கு திருப்பிவிட்டனர். ஆனால், அங்கும் நிலைமை சரி இல்லாததால், விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
சென்னையில் அவசரமாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பின், விமானம், சென்னையில் நேற்று மதியம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பின்,மாலை 3:30 மணிக்கு, மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது.