மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
சென்னை,சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தடத்தில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வழக்கமான ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு, கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
எனவே, இந்த தடத்தில் செல்லும் பயணியரின் வசதிக்காக கூடுதலாக, தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு - 10; தி.நகருக்கு -- 20, பிராட்வேக்கு - 20 என, 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன.
பயணியர் அதிகரிக்கும்போது, தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேருந்து நிலையங்களில், நேரக் காப்பாளர்கள் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.