அரசு பஸ் பஞ்சர் பயணிகள் மறியல் 

செஞ்சி: திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் செஞ்சியில் பஞ்சர் ஆனதால் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை அரசு பஸ் சென்றது. 4:00 மணியள வில், செஞ்சி அரசு பணிமனை எதிரே வந்த போது டயர் பஞ்சராகி நின்றது. எதிரே இருந்த பணிமனையில் டயர் மாற்றித் தரும்படி டிரைவர் கேட்டதற்கு வேறு பணிமனை பஸ் என்பதால் டயர் மாற்றவில்லை.

திருவண்ணாமலையில் இருந்து வந்த அடுத்த பஸ்களில் பயணிகளை ஏற்றி விட்ட போது அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் அந்த பஸ்சில் பயணம் செய்ய மறுத்து விட்டனர். வேறு பஸ்சில் அனுப்ப தாமதம் ஆனதால் அந்த வழியாக வந்த பஸ்களை பயணிகள் மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சத்தியமங்கலம் தனிப்பிரிவு ஏட்டு ஜெயசீலன் மறியல் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, செஞ்சி பணிமனை நிர்வாகத்திடம் பேசி வேறு பஸ் ஏற்பாடு செய்தார். இதையடுத்து பயணிகள் 4:30 மணியளவில் மறியலை கைவிட்டு மாற்று பஸ்சில் சென்னை சென்றனர்.

Advertisement