மருத்துவமனையில் இறந்தவரின் கண் மாயம்: எலிகள் தின்றதாக பகீர்
பாட்னா: பீஹாரில், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடலில் இருந்து, கண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்ணை எலிகள் கடித்து தின்றிருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பன்டுஷ் குமார் என்பவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடந்த 15ம் தேதி துப்பாக்கியால் சுட்டனர்.
டாக்டர்கள் அலட்சியம்
படுகாயமடைந்த அவர், நாளந்தா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அன்றிரவு அவர் உயிரிழந்தார்.
இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாததால், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கையில் அவரது உடல்வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை, பன்டுஷ் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், பன்டுஷ் குமாரின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'பிணவறையில் இருந்து உடல் எடுத்து வரப்பட்ட போது, இடது கண் காணாமல் போனதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
'மேலும், உடலுக்கு அருகில் உள்ள ஸ்ட்ரெச்சரில், அறுவை சிகிச்சை பிளேடு இருந்தது. கண்ணை எலிகள் கடித்து தின்று விட்டதாக டாக்டர்கள் அலட்சியமாக தெரிவிக்கின்றனர்' என்றார்.
இது குறித்து, நாளந்தா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பினோத் குமார் சிங் கூறியதாவது:
இது ஒரு தீவிரமான பிரச்னை. இச்சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு ஒத்துழைப்பு
உயிரிழந்த நபரின் கண்ணை எலிகள் கடித்து தின்றிருக்கலாம் என, சில டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். கண் எப்படி பிடுங்கப்பட்டது என்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னே தெரிய வரும்.
இது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.