சுரங்கபாதையில் மழைநீர் தேக்கம் அகற்றகோரி தேவனேரியில் மறியல்
சோழவரம்:சோழவரம் அடுத்த தேவனேரி, எஸ்.பி.கே., நகர் பகுதிகளுக்கும், சோழவரம் பஜார் பகுதிக்கும் இடையே சென்னை- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு அப்பகுதியில் சுரங்கபாதை உள்ளது. கார், பைக், வேன் உள்ளிட்டவை இதன் வழியாக பயணிக்கலாம்.
குடியிருப்புவாசிகள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு சோழவரம் பஜார் பகுதிக்கு சென்று வர இந்த சுரங்கபாதையை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சிறு மழை பெய்தாலும் சுரங்கபாதை மற்றும் அங்குள்ள இணைப்பு சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. அதில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை ஏற்படகிறது.
அதிகப்படியான மழைநீர் தேங்கும்போது அதில் வாகனங்கள் சிக்கி பழுதாகின்றன. மாற்று வழி இல்லாத நிலையில் குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
தற்போதும் அதே நிலை தொடர்வதால், நேற்று குடியிருப்புவாசிகள் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
பள்ளி செல்லும் மாணவர்கள், வயதானர்வர்கள் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் தேங்கி தண்ணீரில் தடுமாற்றத்துடன் செல்கின்றன. மின்விளக்கு வசதியும் இல்லாமல் இரவு நேரங்களில் இப்பகுதி இருண்டு கிடக்கிறது. மழைநீரை வெளியேற்ற எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சோழவரம் போலீசார் பேச்சு நடத்தினர். அதையடுத்து மறியலை கைவிட்டு, சாலையோரம் நின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் எல்.அன்.டி., நிறுவன அதிகாரிகள் அங்கு வந்து ஒரு வாரத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
அதைதொடர்ந்து, குடியிருப்புவாசிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டதால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.