'குரு' அஷ்வின்...'சிஷ்யன்' லியான்: மீண்டும் ஒரு 'சுழல்' மோதல்
பெர்த்: ''உலகத் தரமான பவுலர் அஷ்வின். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்,'' என நேதன் லியான் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் நவ. 22ல், பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் துவங்குகிறது.
இத்தொடரில் இந்தியாவின் அஷ்வின் 38, ஆஸ்திரேலியாவின் நேதன் லியான் 36, 'சுழல்' ஜாலம் நிகழ்த்த உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் தமிழகத்தின் அஷ்வின் (105 போட்டி, 536 விக்.,) 7வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் லியான் (129ல் 530 விக்.,) உள்ளார்.
இருவரும் எப்படி பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஒட்டுமொத்தமாக அஷ்வின் 114 விக்கெட் (22 போட்டி), லியான் 116 விக்கெட் (26 போட்டி) வீழ்த்தியுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய மண்ணில் அஷ்வின் 39 விக்கெட் (10 போட்டி), லியான், 60 விக்கெட் (15 போட்டி) சாய்த்துள்ளனர். சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு சராசரியில் ஆசிய மண்ணில் அஷ்வின் (21.76), லியானை (30.81) முந்துகிறார். ஆசியாவுக்கு வெளியே அஷ்வினைவிட (33.14), லியான் (30.09) அசத்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஷ்வின் (40 போட்டி, 194 விக்.,), லியான் (43 போட்டி, 187 விக்.,) முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
லியான் கூறியது:எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அஷ்வினை நேருக்கு நேர் பல போட்டிகளில் சந்தித்துள்ளேன். அசத்தலான பவுலர். சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக பக்குவப்படுத்திக் கொள்வார். தனது திறமையை அணியின் நலனுக்காக பயன்படுத்துவார். 'உங்களுக்கு எதிராக விளையாடுபவர் தான் உங்களின் சிறந்த பயிற்சியாளர்' என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதன்படி அஷ்வினிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். அவரது பந்துவீச்சு தொடர்பான 'வீடியோவை' அடிக்கடி பார்ப்பேன். அதில் இருந்தும் பயன் பெற முயற்சித்துள்ளேன். அவரிடம் இருந்து படிக்க வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன. உலகத் தரம் வாய்ந்த பவுலர். டெஸ்டில் 536 விக்கெட் வீழ்த்தியவர். இதை நினைத்து பெருமைப்படலாம்.
அழகான கலைசுழற்பந்துவீச்சு என்பது ஒரு கலை. வயதாக வயதாக தான் முன்னேற்றம் ஏற்படும். பந்துகளை சுழற்றி 'பவுன்ஸ்' செய்வதே எனது பலம். இது போல் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நிகழ்த்துவது கடினம். எனது பந்துவீச்சு குறித்த அனைத்து ரகசியங்களையும் சொல்ல முடியாது. ஏனெனில் ஜடேஜா போன்றோர் படித்து அறிந்து கொள்வர்(நகைச்சுவையாக).
ஆபத்தான அணிசமீப காலமாக பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியை வெல்ல முடியவில்லை. ஆனாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை வீழ்த்தினோம். இது எங்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை அளிக்கும். இந்தியா 'ஆபத்தான' அணி. தரமான வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். மீண்டும் ஒரு விறுவிறுப்பான தொடரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு லியான் கூறினார்.