வடகிழக்கு பருவமழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர்கொள்ள தயார்
ஸ்ரீவில்லிபுத்துார்: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணையை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி நீர்மட்டம் உடையது. இந்த அணையை சுற்றி கொடிக்குளம், பெரியகுளம், விராட சமுத்திரம், பூரி பாறைக்குளம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில் நீர்மட்டம் 37 அடியாக உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையைஅமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
கலெக்டர் ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். வினாடிக்கு 150 கன அடி வீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செய்தியாளர்களிடம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறுகையில், பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கிய நிலையில் விரைவில் பணிகள் துவங்கும். வடகிழக்கு பருவமழை எந்த ரூபத்தில் வந்தாலும் அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது. மழை தான் வரவில்லை என்றார்.