சிறுவனை வாக்காளராக்க முயற்சி தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

1

நாகப்பட்டினம்: நாகையில் தி.மு.க.,வில் அங்கம் வகிக்கும் சிறுவனின் வயது குறித்து, அ.தி.மு.க., சமூக வலைதளம் வாயிலாக கேள்வி எழுப்ப, சிறுவனை வைத்தே தி.மு.க., பதிலடி கொடுத்துள்ளது.



நாகை மாவட்டம் திட்டச்சேரியில் கடந்த 16ம் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. இதில், தி.மு.க., நாகை மாவட்டச் செயலர் கவுதமன், 16 வயதுடைய சிறுவனை வாக்காளராக சேர்க்க விண்ணப்பம் வழங்கும் புகைப்படத்தை, சிறுவன் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்புகைப்படம் மற்றும் சிறுவனின் பிறப்பு சான்றிதழ், சிறுவன் முகநுால் பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அ.தி.மு.க.,வினர், 'சிறுவனின் வயது 16 ஆண்டு, 11 மாதங்கள், 7 நாட்கள். தேர்தல் அதிகாரிகளே கவனமாக இருங்கள்; புதிய வாக்காளரை சேர்ப்பதில் தி.மு.க.,வின் தில்லுமுல்லு' என பகிர்ந்து வருகின்றனர்.



இதற்கு பதிலடியாக, சம்பந்தப்பட்ட சிறுவன், அ.தி.மு.க., மாவட்டச் செயலர் ஓ.எஸ்.மணியன், நாகை நகரச் செயலர் தங்க கதிரவன் ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ''14 வயதில் என்னை அ.தி.மு.க.,வில் இணைத்து தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பும் கொடுத்தபோது, சிறுவனாக தெரியவில்லையா? அரசு அறிவுறுத்தல்படியே, 18 வயதில் வாக்காளராக சேர்ப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே படிவம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., நியாயமான விஷயத்துக்கு மட்டுமே அரசியல் செய்ய வேண்டும்,'' என பதிவிட்டுள்ளார்.
இதை, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement