சுற்றுலா துறையில் சிறந்த பணி 38 நிறுவனங்களுக்கு விருது
சென்னை:சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்படும், சிறந்த பயண ஏற்பாட்டாளர்கள், தங்கும் விடுதிகள், உணவகம் உள்ளிட்ட 17 பிரிவுகளில், 38 நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன் ஆகியோர் விருதுகளை வழங்கினர். விழாவில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
உலகம் முழுதும் உள்ள சுற்றுலா மையங்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. ஆன்மிக சுற்றுலாவில், உலக அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
சுற்றுலாவிற்காக தமிழகம் வரும் பயணியரை காக்க, மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 'இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் - 48' திட்டங்கள் போன்றவை, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாவுக்காக தமிழகம் வருவோருக்கும் பொருந்தும். இதுவரை இத்திட்டங்களில், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். அதில், 20 சதவீதம் பேர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
தமிழகத்திற்கு சுற்றுலா வரும் பயணியரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக, மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இயலும். மேற்கத்திய நாடுகளில் உள்ளதை போல, தற்போது தமிழகத்திலும் சுற்றுலாவுக்கென தனி நாட்கள் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு, சுற்றுலா மையங்களில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில், உடல் சார்ந்த வேலைகளில் மக்கள் அதிகம் ஈடுபட்டனர். தற்போது மூளை சார்ந்த வேலைகளில் அதிகம் ஈடுபடுகிறோம். இதனால், உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண, சில நாட்களாவது சுற்றுலா சென்று, மூளைக்கு புத்துணர்வு கொடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
விழாவில், அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், “சிறந்த பாரம்பரியத்திற்கான விருது, ஆன்மிக சுற்றுலாவுக்கான விருது, சிறந்த மாநிலத்திற்கான விருது என, பல்வேறு விருதுகளை, தமிழக சுற்றுலா துறை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுடன், மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து, கோவையில் மிக விரைவில், ஒரு மாநாட்டை நடத்த உள்ளோம். அரசு அதற்கு, 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது,” என்றார்.