போதை வியாபாரியிடம் சகவாசம் அயனாவரம் போலீஸ்காரர் கைது
சென்னை,
கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறதா என, நீலாங்கரை தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.
சென்னையில் சமையல் மாஸ்டராக பணிபுரியும், துாத்துக்குடியை சேர்ந்த ரகு, 28, ஆரணியை சேர்ந்த நெசவு தொழிலாளி கண்ணன், 47, பெங்களூருவில் இருந்த, மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டை சேர்ந்த ஜனாதன், 29, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், கேமரூன் நாட்டில் இருந்து பெங்களூருக்கு, கூரியர் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை வரவைத்து, அங்கிருந்து சென்னைக்கு கடத்தி வந்து விற்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து, 50 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கைதான கண்ணனின் மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்ததில், அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும், சட்டம் ஒழுங்கு காவலர் பரணி, 32, அடிக்கடி பேசுவதும், ஜி -பே வழியாக அடிக்கடி பண பரிமாற்றமும் நடந்துள்ளதும் தெரிய வந்தது.
பரணியை பிடித்து, போலீசார் விசாரித்ததில், மூன்று மாதமாக போதை பொருள் வியாபாரிகளுடன் கைகோர்த்து செயல்பட்டது தெரிந்தது.
நேற்றுமுன்தினம் இரவு, இவரை போலீசார் கைது செய்தனர். அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.