சாலையோர வியாபாரிகள் பதிவு; நகராட்சியில் சிறப்பு முகாம்

மேட்டுப்பாளையம்; நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள், உதவி பெறுவதற்கு, தகவல் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நகராட்சி அலுவலக வளாகத்தில் டிச. 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த கடன் தொகை பெறுவதற்கு, பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, நல வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய திட்டங்களில் உதவி பெறுவதற்கு, தகவல் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். அலுவலக நாட்களில் காலை, 10:00 லிருந்து, மாலை, 5:00 மணி வரை பதிவு செய்யும் பணிகள் நடைபெறும்.

எனவே நகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், இந்த முகாமில் பங்கேற்று, பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

பயனாளிகள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வரும் பொழுது, பயனாளிகளின் ஆதார் அட்டையும், குடும்பத்தினரின் ஆதார் அட்டைகளும், ரேஷன் கார்டும், மொபைல் போன் ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement