அ.தி.மு.க, உறுப்பினர் அட்டை; மேலிட பார்வையாளர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், சட்டசபை தொகுதி வாரியாக, புதிய வாக்காளர் அடையாள அட்டை வினியோக பணிகளை கண்காணிக்க, மேலிட பார்வையாளராக, முன்னாள் அமைச்சர் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார். அடையாள அட்டைகள் வினியோகம் முடிந்துள்ள நிலையில், இறுதிகட்ட ஆய்வு நடந்தது.

மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சிதலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''2026ல் ஆட்சி அமைந்ததும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இளைஞர், இளம்பெண்களை, கட்சியில் உறுப்பினராக இணைக்க வேண்டும்.

கட்சி நிகழ்ச்சிகளில், இளைஞர், இளம்பெண்களை கட்டாயம் அழைத்து வந்து பங்கேற்க செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement