சிறப்பு அனுமதியுடன் மண் அள்ளும் பணி? காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
பல்லடம்; பல்லடம் அருகே, நீர் ஆதாரக் குட்டையில், சிறப்பு அனுமதி பெற்று மண் அள்ளும் பணி நடந்துவரும் நிலையில், கலெக்டரின் உத்தரவு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்ட விரோதமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கும் விதமாக, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கடந்த, 7ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதி இன்றி, அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில், சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பது மற்றும் அனுமதி இன்றிவாகனங்களில் எடுத்துச் செல்வதை தடுக்கும் வகையில், வருவாய்த்துறை, புவியியல் மற்றும்சுரங்கத் துறை மற்றும் காவல் துறை மூலம் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்துச் செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்படும். கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை, வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை மற்றும் காவல் துறை அல்லது கண்காணிப்பு குழுவிடமோ தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தார்.
கலெக்டர் அறிவிப்பு வெளியாகி சில தினங்களே ஆன நிலையில், பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கைக்காலன் குட்டையில், மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இங்கிருந்து மண் எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற விவரங்கள் தெரியவில்லை.
இது தொடர்பாக, கே.அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதியிடம் கேட்டதற்கு, ''இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தாசில்தார் வாயிலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு யூனிட், எப்போது வழங்கப்பட்டது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் தாசில்தாரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்,'' என்றார்.
இந்த விவகாரம் குறித்து, பல்லடம் தாசில்தார் ஜீவாவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.