அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
அவிநாசி; அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை நடத்தினர்.
அவிநாசி தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் பிரிவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் செவிலியர்கள், நோயாளிகளை காப்பாற்றுவது குறித்தும், கவச உடை அணிந்து பெரும் தீ விபத்தில் சிக்கி தவிக்கும் நோயாளிகளை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்பாக மாற்று பகுதிக்கு அனுப்பி வைப்பது ஆகியன குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.
மேலும், தீயணைப்பானை உபயோகிப்பது குறித்து ஒத்திகை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.