முதல்வர் ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்; அண்ணாமலை ஆவேசம்

39

சென்னை: தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணியை,26, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலையாளி மதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பட்டப்பகலில் வக்கீல் கண்ணன் என்பவரை மற்றொரு வக்கீலின் உதவியாளர் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


ஒரே நாளில் பட்டப்பகலில் நடந்த இரு சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தஞ்சையில் பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்; ஓசூரில் வக்கீல் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் மிக மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை எதிரொலிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும். இது போன்ற விவகாரங்களை திசைதிருப்புவதற்கு பதிலாக, சிறிது நடவடிக்கை எடுத்திருந்தால், இது மாதிரியான சம்பவங்களை தடுத்திருக்கலாம். இதுபோன்ற சட்ட ஒழுங்கு மீறல்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.



தி.மு.க., அரசுக்கு கொட்டு

தி.மு.க., ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, தி.மு.க., அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் தி.மு.க., அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

தி.மு.க., அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற தி.மு.க., அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

Advertisement