அரசு பஸ்சை மறித்து மாணவர்கள் போராட்டம்
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் அரசு டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து குப்பநத்தம் கிராமத்திற்கு தடம் எண் 28 அரசு பிங்க் நிற டவுன் பஸ் தினசரி இயக்கப்படுகிறது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் விருத்தாசலத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக மாலை 5:00 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து குப்பநத்தம் கிராமத்திற்கு செல்லாமல், மாற்று வழித்தடத்தில் பஸ் இயங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில், விருத்தாசலத்தில் இருந்து நரசிங்கமங்கலம் கிராமத்திற்கு சென்ற தடம் எண் 28 பிங்க் நிற டவுன் பஸ்சை, பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் சீருடையில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாலையில் குப்பநத்தம் கிராமத்திற்கு இயக்குவதை நிறுத்தி விட்டதால் 5 கி.மீ., தொலைவிற்கு இருளில் நடந்து செல்வதாகவும், முன் அறிவிப்பின்றி பஸ் இயக்கத்தை நிறுத்தியது ஏன் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர்.போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று, கலைந்து சென்றனர்.